தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
தாடிக்கொம்பு,: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.ரெட்டியார்சத்திரம் பண்ணைப்பட்டி பழனிக்கவுண்டன்புதுார் குட்டிக்கரட்டில் குரும்பக்கவுண்டர் ராயர் குல இனமக்களுக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா நடக்கிறது. இந்தாண்டுக்கான திருவிழா அக்., 10 ல் கரூர் அரவக்குறிச்சி அமராவதி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.இதையடுத்து நேற்று மதியம் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதம் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் முன்பு பக்தர்கள் ஈர உடையுடன் வரிசையாக அமர பூஜாரி அழகர்சாமிக்கு அருள் வந்து பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். தொடர்ந்து பெண் பக்தர்கள் ஆரோக்கியமாக வாழ பூஜாரியிடம் சாட்டை அடி பெற்றுக் கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.