வசதி இல்லாத காந்தி மார்க்கெட் வாகனங்கள் திரும்புவதில் சிரமம்
ஒட்டன்சத்திரம்: தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் வாகனங்கள் எளிதாக திரும்பும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி வளாகத்தில் சுமை துாக்கும் தொழிலாளர்கள், கணக்கர்கள், கடை உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வியாபாரிகள், விவசாயிகள் வருகின்றனர். மார்க்கெட் வளாகம் அமைந்த இடத்திற்கு எதிரே ஒட்டன்சத்திரம் வருவதற்கான பஸ் ஸ்டாப் உள்ளது. பஸ் ஏற வருபவர்கள் தடுப்பு சுவரில் ஏறி ஆபத்தான முறையில் நடுரோட்டை கடக்கின்றனர். மார்க்கெட்டுக்கு தினமும் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. வளாகத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள தாராபுரம் ரோட்டில் சிறிது துாரம் சென்று 'யு ' டர்ன் எடுத்து திரும்ப வேண்டி உள்ளது. காய்கறிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இது மிகவும் சிரமமாக உள்ளது. வளாகத்திற்கு வரும் வாகனங்களுக்கும் இதே நிலைதான் உள்ளது. மேலும் ரோட்டுப் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் ரோட்டை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. மார்க்கெட் வந்து செல்லும் வாகனங்கள் எளிதில் திரும்பும் வகையில் வளாகத்திற்கு எதிரே தாராபுரம் ரோட்டில் நடுவில் உள்ள தடுப்பு சுவரை எடுத்துவிட்டு வழி விட வேண்டும். இரவு நேரத்தில் இருள் சூழாமல் இருக்க ரோட்டின் நடுவில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். இத்துடன் ஒரு உயர் மின் கோபுர விளக்கும் அமைக்க வேண்டும். இதோடு காய்கறி வளாகத்திற்கு உள்ளே சென்று வரும் வகையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மினி பஸ் இயக்க வேண்டும்.