நத்தம் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் எட்டு துணை மின்நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் விசுவநாதன் பேசினார். நத்தம் துணை மின்நிலையத்தில், புதிய உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்து அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3000 இலவச விவசாய மின் இணைப்புகளும், சுயநிதித்திட்டத்தின் கீழ் வரும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக மாவட்டத்தில் வரும் ஐந்து ஆண்டுகளில் பாப்பம்பட்டி, எழுவனம்பட்டி, மினுக்கம்பட்டி, கேதையுறம்பு, கொத்தையம், திண்டுக்கல் சந்தைரோடு, சின்னாளபட்டியில் 110 கே.வி., துணை மின்நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சின்னக்காம்பட்டி, சித்தர்கள்நத்தம், காந்திகிராமம், ராமராஜபுரம், கோவிலூர், பாளையம், தாடிக்கொம்பு, வி.குரும்பபட்டி, ரங்கநாதபுரம், அய்யம்பாளையம், விட்டல்நாயக்கன்பட்டி, செங்குறிச்சியில் 12 துணை மின்நிலையங்களில் கூடுதலாக டிரான்ஸ்பார்மர்கள் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். மின்வாரிய தலைமைப்பொறியாளர் நட்சடாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர்கள் குமரேசன், வெங்கட்ராமன், செயற்பொறியாளர் வினோதன் பங்கேற்றனர்.