மேலும் செய்திகள்
போர் வீரர்கள் வசித்த ராமநாதபுரம் பகுதி
18 hour(s) ago
வேடசந்துார்: வேடசந்துார் தண்ணீர்பந்தம் பட்டியில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்து கல்வெட்டு கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இதை திண்டுக்கல் வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாத தாஸ் தலைமையில் மாணவர் ரத்தின முரளிதர், ஆர்வலர்கள் சந்திரசேகர், உமாமகேஸ்வரன், பெருமாள்சாமி, முத்துராமன், ராம்ராஜ் ஆகியோர் வேடசந்தூர் - எரியோடு ரோடு தண்ணீர் பந்தம் பட்டியில் ஆய்வு செய்தனர். கல்வெட்டில் உள்ள தகவல் குறித்து இவர்கள் கூறியதாவது : விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் 1529 ல் தமிழகத்தை பல மாகாணங்களாக பிரித்து அதை ஆள்பவர்கள் மண்டலேசுவரர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்களின் கீழ் நாடு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் அமர நாயக்கர் எனும் தலைவர்கள் ஆண்டனர். திண்டுக்கல் அதன் வடக்கு பகுதிகளும் முல்பகல் ராஜ்யம் என்றும் இருந்தது இதன் அமர நாயக்கராக வல்ல கொண்டம நாயக்கர் இருந்தார். அமரநாயக்கர்கள் பேரரசுக்கு ஆண்டுதோறும் கப்ப தொகையும், குறிப்பிட்ட எண்ணிக்கை படை வீரர்களும் கொடுத்து உதவ வேண்டும். கிருஷ்ணதேவராயர் பாமினி அரசிற்கு எதிராக நடத்திய ரெய்ச்சூர் போருக்கு கொண்டம நாயக்கர் ஒரு லட்சம் காலாட்படை வீரர்களையும், பத்தாயிரம் குதிரை படை வீரர்களையும் ரெய்ச்சூர் போர்க்களத்திற்கு அனுப்பினார். இக்கல்வெட்டில் உள்ள அரசர் வல்ல கொண்டம நாயக்கரே வடமதுரை பெருமாள் கோயிலை கட்டியவர். மேலும் தொட்டணம் பட்டி அருகே உள்ள பாண்டியர்கள் வெட்டிய குளத்தை சீரமைத்து பெரிய ஏரியாகவும் வெட்டினர். இந்த ஏரி இவர் பெயராலே வல்ல கொண்டமநாயக்கர் சமுத்திரம் என பெயர் பெற்று தற்காலத்தில் பெயர் மருவி வல்ல கொண்டான் சமுத்திரம் என அழைக்கப்படுகிறது. வேடசந்துார் - எரியோடு ரோட்டில் தண்ணீர் பந்தம் பட்டியில் இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தை கட்டியவர் தண்ணீர் பந்தம்பட்டி முத்து கவுண்டர் மகன் பொம்மா கவுண்டர். தற்போது இம்மண்டபம் சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. இம்மண்டபத்தை குடிகளும், ஆள்பவரும் காப்பாராக என கல்வெட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆள்பவர்கள் கவனித்து சீரமைத்தால் இம்மண்டபம் மேலும் சிறப்புறும் என்றனர்.
18 hour(s) ago