நீட் விவகாரத்தில் தி.மு.க., பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றவில்லை: கார்த்தி எம்.பி.,
திண்டுக்கல்: ''நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க., பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றவில்லை. அதை ரத்து செய்வதற்கான அதிகாரம் மாநில அரசிடம் இல்லை,'' என, திண்டுக்கல்லில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு தடையில்லை என நீதிமன்றம் கூறிய பிறகு ஈ.டி., விசாரணை நடத்துகிறது. தேர்தல் வரும் மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு எதிர்ப்பாக இருக்கும் அரசுகள் மீது ஈ.டி., ரெய்டு நடத்துவது வாடிக்கை தான்.மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு உட்பட்டுதான் கவர்னர் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் கவர்னர், ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மீது ஒப்புதல் அளிக்க வேண்டும். வேண்டுமானால் ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கலாம். அதற்கு நீதிமன்றம் விளக்கம் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் உச்சநீதிமன்றத்தின் முடிவு.தமிழகத்தில் 'இண்டி' கூட்டணி வலுவாக உள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தேர்தல் களம் உள்ளது. 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதே கூட்டணி தலைவர்களின் எண்ணம். சட்டசபை தேர்தலை சந்திக்க காங்., தயார் நிலையில் உள்ளது.ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பிறகு அனைவரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளனர். பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதால் பொருளாதார, வர்த்தக, ராஜாங்க ரீதியாக அவர்கள் மீது அழுத்தத்தை கொடுத்து தான் ஆக வேண்டும்.நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் விரும்பிய மாநிலங்கள் பின்பற்றலாம் என ஒரு ஆப்ஷனாக மட்டுமே இருந்தது. அதை கட்டாயப்படுத்தியது பா.ஜ., அரசு என்றார்.