உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமைச்சர் ஐ.பெரியசாமி மகன், மகள் வீடுகளில் நள்ளிரவு வரை நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு பெட்டிகளில் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள்

அமைச்சர் ஐ.பெரியசாமி மகன், மகள் வீடுகளில் நள்ளிரவு வரை நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு பெட்டிகளில் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மகள் இந்திராணிக்கு சொந்தமான வீடுகள், மில்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். இங்கிருந்து கைப்பற்றிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பெட்டிகளில் எடுத்துச் சென்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக திண்டுக்கல் துரைராஜ் நகர் 2வது தெருவில் வசிக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி, வள்ளாலார்நகரிலுள்ள அவரது மகள் இந்திராணி, மகனும் பழநி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார் வீடுகள், ஸ்பின்னிங் மில்கள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.எல்.ஏ.,விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் ஒரேநேரத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மத்திய அரசின் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அமைச்சரின் வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் காலை 6:45 மணிக்கு சென்ற அதிகாரிகள், 11 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டு மாலை 6:30 மணிக்கு நிறைவு செய்தனர். அதேநேரம் சீலப்பாடியிலுள்ள மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மகள் இந்திராணி வீடு, மில் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன் தினம் நள்ளிரவு தாண்டியும் சோதனை நீடித்தது. இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பெட்டி, பெட்டியாக எடுத்து கொண்டு மூன்று கார்களில் அதிகாரிகள் சென்றனர். வள்ளலார் நகரில் இந்திராணி வீட்டில் சோதனை முடிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த இ.டி., அறிக்கையில் அவர் கையெழுத்திட மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு தான் அங்கு அனைத்து நடைமுறைகளையும் முடித்துக்கொண்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ