| ADDED : பிப் 22, 2024 06:18 AM
செம்பட்டி : ' ஊராட்சி ஒன்றிய நலத்திட்ட பணிகளின்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை ஒப்பந்ததாரர்கள் கண்டு கொள்வதில்லை ' என ஆத்துார் ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.ஆத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், பி.டி.ஓ., அருள்கலாவதி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., குமார வேலு வரவேற்றார்.ஒன்றிய அலுவலகத்திற்கு மூன்று கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் வழங்கியது, 565 கோடி மதிப்பில் வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிப்பு ஆகியவற்றிற்காக முதல்வர் ஸ்டாலின், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, தலைவர் வாசித்தார். இலவச பயண வசதியை, மலை கிராம பகுதிக்கும் விரிவாக்கம் செய்திருப்பதை வரவேற்று துணைத்தலைவர் தீர்மானம் வாசித்தார். கவுன்சிலர்கள் விவாதம்
ஆனந்தன் (அ.தி.மு.க.,): ஒன்றிய கவுன்சில் நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஒப்பந்ததாரர்கள் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை பிரச்னை ஏற்படும் சூழலில் மட்டுமே கவுன்சிலர்களின் ஆதரவை நாடி வருகின்றனர்.ராஜலட்சுமி (அ.தி.மு.க.,): ஒன்றிய நிதியிலிருந்து நலத்திட்டங்கள் நடைபெறும் போது கவுன்சிலர்களின் பெயர்களை எழுதுவது கிடையாது. மக்கள் ஓட்டுக்களை பெற்று பிரதிநிதியாகத்தானே இங்கு வந்துள்ளோம்.பி.டி.ஓ.,: நலத்திட்டங்கள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்படும்.நாகவள்ளி (தி.மு.க.,): நான்கரை ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சிலில் புகார் செய்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இனி 5 மாதங்கள் தான் இருக்கிறது. சொன்னால் என்ன? சொல்லாவிட்டால் என்ன?சாதிக் (தி.மு.க.,): சித்தரேவு ஊராட்சியில் மின்விளக்கு, சாக்கடை வடிகால் வசதி முறையாக செய்து கொடுக்கவில்லை. மயானத்திற்கு சுற்றுச்சுவரும் இல்லை.பி.டி.ஓ.,: கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.