லாரியை வேனில் பின் தொடர்ந்த டவுசர் கொள்ளையர்கள் ஓட்டம் 60 எண்ணெய் பெட்டிகளுடன் வேன் பறிமுதல்
செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே எண்ணெய் பெட்டிகளுடன் சென்ற லாரியை வேனில் பின்தொடர்ந்த டவுசர் கொள்ளையர்கள் போலீசாரை கண்டதும் ரோட்டோர பள்ளத்தில் குதித்து தப்பினர். வேனிலிருந்து 60 எண்ணெய் பெட்டிகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். கன்னிவாடி எஸ்.ஐ., சிராஜ்தீன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அதிகாலை 3:00 மணியளவில் செம்பட்டி ரவுண்டானா அருகே எண்ணெய் பெட்டிகளுடன் சென்ற கன்டெய்னர் லாரியை பின் தொடர்ந்து சென்ற வேனில் டவுசர் அணிந்த சிலர் அமர்ந்திருப்பதை கவனித்தார். வேனை டூவீலரில் பின் தொடர்ந்த போது வத்தலக்குண்டு ரோடு வீரசிக்கம்பட்டி அருகே வேனினிலிருந்த டிரைவர் உட்பட 4 டவுசர் அணிந்திருந்த நபர்கள் ரோட்டோர பள்ளத்தில் குதித்து தப்பி சென்றனர். வேன் சற்று துாரத்தில் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்த எஸ்.ஐ., பின் அவர்கள் உதவியுடன் வேனை மீட்டு ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தார். அதில் சன்பிளவர் எண்ணெய் பாக்கெட்கள் கொண்ட 60 பெட்டிகள் இருந்தது. இது லாரியிலிருந்து எடுக்கப்பட்டது தெரிந்தது. வேன் கடந்து வந்த முந்தைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.