கோம்பைப்பட்டியில் யானைக்கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை
ஆயக்குடி: திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே கோம்பைப்பட்டி பகுதியில் யானைக்கூட்டம் சுற்றி திரிவதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் வனப்பகுதி அருகே கோம்பைப்பட்டி பகுதியில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மக்காச்சோளம், தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விளைவித்து வருகின்றனர். இப்பகுதி மலையடிவாரப் பகுதியில் யானை கூட்டங்கள் சுற்றி திரிகின்றன. ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா கூறுகையில்,வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். வனப் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். விளைநிலங்களுக்குள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். கோபப்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது ''என்றார்.