உறுப்பினர்களின் இருப்பை உறுதி செய்யும் அ.தி.மு.க., போராட்ட போட்டோக்களை அனுப்ப முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்
திண்டுக்கல் : அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களின் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு பேராட்டங்களில் பங்கேற்போர் புகைப்படங்களை அனுப்புங்கள் என திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் அறிவுறுத்தினார்.தமிழக அரசியல் கட்சிகள் 2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி காய்களை நகர்த்தி வருகின்றன. அ.தி.மு.க.,விற்கு பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க., பல அணிகளாக பிரிந்துள்ளன. பொது செயலர் முறையில் பழனிசாமி கட்சியை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கட்சிப்பணிகள் குறித்து ஒன்றிய, நகர, பேரூராட்சி வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளார். தொண்டர்கள் மற்ற கட்சிகளுக்கு போகாத வண்ணம் அவர்கள் இருப்பை உறுதி செய்ய கிளை வாரியாக கூட்டங்கள் நடக்கின்றன. அக்., 8 ல் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் மனிதசங்கிலி நடக்கவுள்ளது. இதற்காக திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.அவர் பேசுகையில்,''தொண்டர்களிடம் பாகுபாடு பார்க்காதீர்கள். சிறிய கூட்டம் என்றாலும் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்போரிடம் கையெழுத்து பெற வேண்டும். அதை தலைமைக்கு அனுப்ப வேண்டும். அக்.,8 நடக்கும் போராட்டத்தில் பங்கேற்போர் போட்டோக்களை மாவட்ட தலைமைக்கு அனுப்ப வேண்டும். எத்தனை பேர் பங்கேற்றனர் என அறிய வேண்டும். அனைத்து கட்சி தலைமை தகவல்களை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.கட்சியினர் கூறியதாவது: தொடர் தோல்விகளால் கட்சியினர் துவண்டு உள்ளனர். கட்சியினருக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. போராட்டங்கள், கூட்டங்களில் கலந்து கொள்ளதாவர்களை கண்டறிந்து மீண்டும் களப்பணியாற்ற வைக்க தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதிருப்தியில் உள்ளவர்களிடம் பேசி மாற்று கட்சிக்கு சென்று விடாதபடி பணிகள் நடக்கிறது. அதற்கு முன்னோட்டம் தான் இந்த போட்டோ சேகரிப்பு என்றனர்.