உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிலம் அபகரிப்பு, மகன் இறப்புக்கு நீதி ;குறை தீர் கூட்டத்தில் முறையீடு

நிலம் அபகரிப்பு, மகன் இறப்புக்கு நீதி ;குறை தீர் கூட்டத்தில் முறையீடு

திண்டுக்கல்: நிலத்தை அபகரிப்பதாகவும் ,மகன் இறப்புக்கு நீதி வழங்குங்க என 274 பேர் பல் வேறு குறைகளுடன் மனுக்கள் வாயிலாக திண்டுக்கல்லில் நடந்த குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடியிடம் முறையிட்டனர். கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா,ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி,கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமார்,தனித்துணை கலெக்டர் கங்காதேவி பங்கேற்றனர்.கொடைக்கானல் பூலத்துார் அழகர்சாமி மனைவி முத்துபாண்டிஸ்வரி ஊர் பொதுமக்களுடன் வந்து கொடுத்த மனுவில், நானும் என் கணவரும் கூலி வேலை செய்கிறோம். எங்களுக்கு 16 வயதில் ராஜபாண்டி மகன் இருந்தார். அவரை பூலத்துார் அரசு பள்ளியில் பணியாற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் சவுந்திரபாண்டியன் மன உளைச்சல் ஏற்படும் விதமாக பேசி உள்ளார். இதனால் ராஜபாண்டி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சம்பந்தபட்ட ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்தும் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் மீது முறையான நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி,இழப்பீடு வழங்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தனர். திண்டுக்கல் அழகுபட்டி தெப்பகுளத்துப்பட்டி ஊர் மக்கள் மக்கள் கொடுத்த மனுவில், சென்னக்குளம் அருகே புதியதாக தனியார் சார்பில் கல்குவாரி அமைய உள்ளது. ஏற்கனவே இதன் அருகில் 2 கிரஷர்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனாலே பல பாதிப்புகளை நாங்கள் சந்திக்கிறோம். மீண்டும் புதிய கல்குவாரி அமைப்பதால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் நிலை ஏற்படும். இதை துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் பழைய கன்னிவாடி மக்கள் கொடுத்த மனுவில்,கரிசல்பட்டி மொட்டுகோம்பை மலை அடிவார பகுதியில் கருப்பசாமி,கன்னிமார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 80 சென்ட் நிலம் உள்ளது. கரிசல்பட்டியை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் கோயிலுக்கு அருகில் நிலம் வாங்கி விவசாயம் செய்வதாக கூறி அனைத்து நிலங்களிலும் மண்ணை எடுத்து விற்பனை செய்கிறார். இரவு நேரத்தில் மரங்களை வெட்டுகிறார். இப்பகுதியில் செல்லும் மக்களையும் தடுக்கிறார். யாராவது கேட்டால் மிரட்டுகிறார். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து கோயில் நிலங்களை மீட்டு தர வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தனர்.

பெண் உட்பட இருவர் தீக்குளிக்க முயற்சி

நிலக்கோட்டை சடையாண்டி புரத்தை சேர்ந்த ராஜாங்கம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நிலையில் குறைதீர் கூட்டம் நடக்கும் இடம் அருகே பெட்ரோலை தன்மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு போலீசார் அவரை மீட்டனர். அவர் கூறுகையில்,'' சிறியளவில் விவசாயம் செய்கிறேன். சில்லோடை எனும் ஓடையை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளதால் ஓடையை பயன்படுத்த முடியாமல் தவிக்கிறோம். விவசாய பொருட்களையும் வெளியில் எடுத்து செல்வதற்கு இடையூறு ஏற்படுத்துகிறார். இதன்மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயன்றதாக '' கூறினார். இதேபோல் வேடசந்துார் சுக்காம்பட்டி செட்டியப்பட்டியை சேர்ந்த லதாவும்,தன் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுப்பதற்காக உறவினர் குமாரி உடன் வந்தார். இவரும் மண்ணெண்ணெய் உடன் தற்கொலை ஈடுபடும் நோக்கில் வந்தார். பாதுகாப்பு போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்காக அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ