அண்ணனை கொல்ல முயன்ற தங்கை குடும்பத்துக்கு தண்டனை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விருவீடு சென்மார்பட்டியில் நிலப்பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வீட்டில் துாங்கிய அண்ணனை, அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற தங்கை குடும்பத்திற்கு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருவீடு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி வனராஜா40. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் சிறிதளவு நிலம் உள்ளது. 2022ல் இவரது தங்கை நித்தியா33, தனது அண்ணன் வனராஜாவிடம், நிலத்தை தனக்கு தாருங்கள் என கேட்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தங்கை நித்தியா தன் கணவர் உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேசுடன், வந்து வீட்டில் துாங்கி கொண்டிருந்த வனராஜாவை, அரிவாளால் வெட்டி, பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றனர். அதற்குள் சுதாரித்த வனராஜா, காயமடைந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் உதவியோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக விருவீடு போலீஸ் ஸ்டேஷனில் வனராஜா, புகாரளிக்க போலீசார் வழக்கு பதிந்து நித்தியா, ராஜேஷ், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிகள் ராஜேசுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.6 ஆயிரம் அபராதம், நித்தியாவிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.11,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக குமரேஷன் ஆஜரானார்.