திண்டுக்கல்லில் விவசாயி கொலை உடல் அட்டைப்பெட்டியில் வைத்து வீச்சு
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் விவசாயியை கொலை செய்து அவரது உடலை அட்டைப்பெட்டியில் வைத்து பைபாஸ் ரோடு அருகே வீசி சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.திண்டுக்கல் - பழநி பைபாஸ் ராமையன்பட்டி பிரிவு அருகே அட்டைப்பெட்டியில் உடல் கிடந்தது. தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அதனை கைப்பற்றினர். விசாரணையில் இறந்தவர் சாமியார்பட்டியை சேர்ந்த குபேந்திரன் 55, என்பதும் இவர் திண்டுக்கல் தியேட்டர் அருகே உள்ள முருகபவனத்தில் குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரிந்தது. இவரது மனைவி வாணிஸ்ரீ முத்தனம்பட்டி அரசுப்பள்ளி தலைமையாசிரியராக உள்ளார். மூத்த மகன் ஜெர்மனியில் இன்ஜினியராகவும், இளையமகன் சென்னையில் வழக்கறிஞராகவும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் பைனான்ஸ் தொழில் செய்துவந்த குபேந்திரன் தற்போது அதைவிட்டு தோட்டங்களை பராமரித்தார். பழநி பைபாஸ் ரோட்டில் வீடும் கட்டி வந்தார். நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் கொலைசெய்யப்பட்டது உறுதியானது. அவர் எப்படி கொலை செய்யப்பட்டார், அதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.