| ADDED : ஆக 17, 2024 01:53 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் வெண்பட்டு கூடு உற்பத்திக்காக மல்பரி செடிகள் விவசாயத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் செய்து வருகின்றனர். இதற்காக அரசு பட்டுக்கூடு வளர்ச்சிக் கழக விற்பனை கூடங்களிலிருந்து பட்டுக்கூடு புழு முட்டைகள் பெறப்படுகின்றன. இளம் புழு வளர்ப்பு மனைகள் மாவட்டத்தில் தொப்பம்பட்டி,சாணார்பட்டி பகுதியில் உள்ளன. தரமற்ற முட்டை வினியோகம், இளம் புழு வளர்ப்பு மனைகளில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் பட்டுக்கூடு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. தற்போது ஒரு மாதத்தில் 60 முதல் 100 கிலோ பட்டுக்கூடு மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. ஒரு கிலோவுக்கு அனைத்து செலவுகள் உட்பட ரூ. 550க்கு மேல் விவசாயிகளுக்கும் செலவாகிறது. உற்பத்தி குறைவு, உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாக இதன் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு வந்துள்ளனர். தற்போது இயந்திரம் மூலமாகவும், கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தும், மல்பரி செடிகளை அழித்து மாற்று விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதன் மீது மத்திய ,மாநில அரசுகளின் பட்டுக்கூடு வளர்ச்சிக் கழகத்தினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.