| ADDED : மார் 20, 2024 12:27 AM
கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப் பகுதியில்தொடர்ந்து எரிந்த காட்டுத்தீயை கட்டுபடுத்த முடியாததற்கு தீ த்தடுப்பு கோடுகள் முன் கூட்டியே அமைக்காததே காரணமாக உள்ளது.கொடைக்கானல் வன சரணாலயத்தில் 7 வனச்சரங்கள் உள்ளன. இதில் ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட வனப்பகுதி உள்ளது. ஆண்டுதோறும் கோடை வெயிலின் தாக்கத்தில் இவ்வனப்ப்பகுதிகள் காட்டுத் தீயால் வெகுவாக பாதிக்கப்படுவது வழக்கம். இதனால் ஆண்டுதோறும் வனத்துறை வனபகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதை தவிர்க்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.இதற்காக வனச்சரங்களில் தீ ஏற்படும் அபாய பகுதியை கண்டறிந்து தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். இதற்காக ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் ஒதுக்கப்பட்ட இந்நிதி நடப்பாண்டில் தாமதமாக பிப்ரவரியில் 50 சதவீதம் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.இருந்த போதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வனபகுதியில் உள்ள இலை, தலைகள் கருகின. இந்நிலையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்க முன்னேற்பாடுகளை மேற்கொண்ட போது காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் இம்முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.மேலும் உயரமான பகுதியாக உள்ள கொடைக்கானல் வனப்பகுதிகளில் பள்ளதாக்கு, சரிவு பகுதிகளில் தீயை அணைப்பதில் சிக்கல் உள்ளது. நவீன தொழில்நுட்ப உபகரணங்களின்றி வனத்துறையினர் தீயணைக்க போராடுகின்றனர். தற்போது வழங்கப்பட்ட தோல் ஸ்பிரேயர் தண்ணீர் தீயணைப்பான்களை மலை பகுதிகளில் பயன்படுத்துவது சாத்தியமில்லாத நிலையில் வனத்துறையினர் கூலியாட்களை கொண்டு தீயை அணைக்கின்றனர்.இதற்காக கூடுதல் செலவு செய்து ஆட்களை வரவழைத்து தீயை அணைக்கும் முயல்வதால் பொருளாதார ரீதியாக வனத்துறையினர் பாதிக்கின்றனர். இதற்கான செலவின நிதியும் விடுவிக்கப்படுவதில்லை.திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டங்களில் கோடைகாலங்களில் ஏற்படும் காட்டுத் தீயால் ஏராளமான வனப்பகுதி தீக்கிரையாவதும், வனவிலங்குகள், அரிய மரங்கள் உள்ளிட்டவை தீயில் கருகுவதும், சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க தற்போது ஊட்டியில் ஹெலிகாப்டர்கள் கொண்டு தீ அணைக்கும் முயற்சி போன்று இவ்விரு வனக்கோட்டங்களில் ஹெலிகாப்டர் கொண்டு தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்ட நிர்வாகம் வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்த வேண்டும்.வனங்களை பாதுகாக்க வழக்கம் போல் விடுவிக்கப்படும் நிதிகளை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.