டாஸ்மாக் ஊழல், ரெய்டு விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வர் மவுனம் சாடுகிறார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன்
திண்டுக்கல்:''மத்திய அரசு எந்த அறிவிப்பு விட்டாலும் உடனே கேள்விக்கணைகளை தொடுக்கிற முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஆகியோர் டாஸ்மாக் ஊழல், ரெய்டு விவகாரத்தில் மவுனம் காப்பது மர்மமாக இருக்கிறது,'' என திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.அவர் மேலும் கூறியதாவது : சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., தலைமையில் நல்ல கூட்டணி அமைந்து உள்ளது. சில வலுவான கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளன. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தி.மு.க., நிர்வாகிக்கு தொடர்பு இருந்தது. இதேபோல் தற்போது அரக்கோணம் பாலியல் வன்கொடுமை விவகாரத்திலும் தி.மு.க., நிர்வாகி சம்பந்தப்பட்டுள்ளார். தி.மு.க., அரசு அவர்களை காப்பாற்ற வழக்கை மூடி மறைக்க முயற்சிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டு விட்டது.மத்திய அரசு எந்த அறிவிப்பு விட்டாலும் உடனே கேள்விக்கணைகளை தொடுக்கிற முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி டாஸ்மாக் ஊழல், அமலாக்கத்துறை ரெய்டு குறித்து வாய் திறக்கவில்லை. இருவர் மவுனத்தால் மர்மம் இருப்பது தெரிகிறது. இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை மறைப்பதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் போட்டோ சூட் நடத்தி முடித்திருக்கிறார். அதன் மூலம் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். மக்கள் நலனை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.1.5 லட்சம் கடன் சுமையை தி.மு.க., சுமத்தி உள்ளது. வரிக்கு மேல் வரியை உயர்த்தியது மட்டுமல்லாமல் அத்தியாவசியமான பால் உட்பட அனைத்து பொருட்கள் விலையை உயர்த்தி வருகிறது. இதற்கு எல்லாம் முடிவு கட்டுவதாக 2026 சட்டசபை தேர்தல் இருக்கும் என்றார்.