சுகாதாரக்கேட்டுடன் கொடைஅரசு கல்லுாரி
கொடைக்கானல்: கொடைக்கானலில் செயல்படும் அரசு கலைக்கல்லுாரி சுகாதாரக் கேட்டுடன் நோய் தொற்று அபாயத்தில் செயல்பட்டுள்ளது.கொடைக்கானல் அட்டுவம் பட்டியில் அரசு கலை,அறிவியல் மகளிர் கல்லுாரி செயல்படுகிறது. இங்கு 600க்கு மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். அடிப்படை கட்டமைப்புகள் ஏதுமின்றி வெறுமனே கல்லுாரி கண் துடைப்பாக செயல்படுகிறது. கல்லுாரியில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியான நிலையிலே உள்ளது. சில தினங்களுக்கு முன் கல்லுாரிக்குள் எழுந்த பாலியல் புகாரால் அலுவலக பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து கல்லுாரி கல்வித்துறை அதிகாரிகள் கல்லுாரியை ஆய்வு செய்ததில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக நுாலகத்தில் விடுதி செயல்பட்டதை உறுதி செய்து, உடனடியாக மூட உத்தரவிட்டும் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கல்லுாரி கல்வி இணை இயக்குனர் மூலம் முதல்வருக்கு உத்தரவிட்டனர். இங்குள்ள சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி நோய் தொற்று அபாயத்திலும், கல்லுாரி வளாகம் முழுமையும் புதர் மண்டி வனவிலங்குகள், விஷ பூச்சிகள் நடமாடும் பகுதியாகவே உருமாறி காணப்படுகிறது. நுாலகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிக்கு செல்லும் பாதை,சமையலறை, கேண்டின் உள்ளிட்ட பகுதிகளில் எஞ்சிய அழுகிய நிலையில் உள்ள உணவுகளின் குவியல் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மகளிர் கல்லுாரியில் ஆண் சமையலர்கள் ஏராளமான சர்ச்சைகள் இருந்தது. கல்வித்துறை அதிகாரிகள் இனிவரும் காலங்களில் கல்லுாரியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் இங்கு நடந்த விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.