தடுப்பூசியால் குழந்தை இறந்ததாக தவறான செய்தி அரசு டாக்டர்கள் சங்கம்
திண்டுக்கல்: ' தடுப்பூசியால் குழந்தை இறந்ததாக தவறான செய்தி பரப்புவதாக ' தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் ரங்கசாமி, திரிலோக சந்திரன், செந்தில்குமார் கூறினர். அவர்கள் கூறியதாவது : கள்ளிமந்தையம் அருகே தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக கருதி குழந்தையின் தந்தையும், தாத்தாவும் சேர்ந்து கிராம சுகாதார செவிலியர், டாக்டரை தாக்கி உள்ளனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கண்டனத்தை தெரிவிக்கிறது. காவல்துறை துரித நடவடிக்கையாக டாக்டர், செவிலியரை தாக்கிய இருவரையும் கைது செய்துள்ளது.இதை வரவேற்கிறோம். தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்ததாக தவறான செய்தியும் பரவுகிறது. அதே ஊரில் வேறு சில குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை எந்த குழந்தைகளுக்கு தொந்திர , பாதிப்பு இல்லை. இறந்த குழந்தைக்கு நாட்டு வைத்திய முறையில் சில சிகிச்சை அளித்துள்ளனர்.தொக்கம் எடுத்தல், மாட்டுப்பால் கொடுப்பது, புகைபோடுவது, மந்திரித்தல் எனும் பெயரில் மாந்திரீகம் என மூட பழக்கவழக்கங்களில் தொடர்ந்து 40 நாட்கள் குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி அவர்களாகவே சிகிச்சை அளித்துள்ளனர். இதனாலே குழந்தை இறந்திருக்கிறது.பணியில் உள்ள டாக்டர்கள், செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் பொருட்டு சட்டம் குறித்து இன்னும் அதிக விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்றனர்.