மழை பெய்தால் தனித்தீவாகும் ஜி.எஸ்.நகர்
திண்டுக்கல்: குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர், துார்வாரப்படாத சாக்கடை, விளக்குகள் இல்லாதததால் அனுதினமும் அச்சம் என பல்வேறு பிரச்னைகளோடு திண்டுக்கல் ஜி.எஸ்., நகர் குடியிருப்பு வாசிகள் உள்ளனர்.திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் உள்ள ஜி.எஸ். நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கண்ணன், செயலர் சிவலிங்கம், பொருளாளர் கணேசன், உறுப்பினர்கள் விஜய், குமார் கூறியதாவது: புறநகர் பகுதியில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிகளை எவரும் கண்டு கொள்வதில்லை. வீடுகளுக்கு இடையே உள்ள காலியிடங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் உள்ள இடைவெளி ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவிற்கு செல்வது போல் உள்ளது. காலியிடங்களில் தேங்கி நிற்கும் நீரால் கொசு உற்பத்தியாவதோடு நோய் தொற்று அபாயம் உள்ளது. மழைகாலங்களில் இந்த நீர் ரோட்டில் வெள்ளம் போல் ஓடுகிறது. 10 தெருக்கள் உள்ள இங்கு ஒரு தெருவிலும் ரோடுகள் சரியில்லை. மழைகாலங்களில் பள்ளங்களில் நீர் தேங்கி சென்று வரவே சிரமமாக உள்ளது. குடியிருப்பை ஒட்டிய சாக்கடை ஆங்காங்கே உடைந்து குடியிருப்புக்குள் கழிவுநீர் வந்து விடுகிறது.பிரதான ரோட்டை ஒட்டி குடியிருப்பு இருந்தும் ரோட்டில் ஒரு விளக்கு கூட இல்லை . மழைகாலம் வந்தாலே குடியிருப்பு பகுதி தனித்தீவு போல் மாறி விடுகிறது. குப்பை அள்ள எவருமே வருவதில்லை என்றனர்.