ரூ.22.45 லட்சம் மோசடி குஜராத் வாலிபர் கைது
திண்டுக்கல்: டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்தவரிடம் ரூ.22.45 லட்சம் மோசடி செய்த குஜராத் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் நாகல்நகரைச் சேர்ந்தவர் மனோகரன் 60. இவரது அலைபேசி வாட்ஸ் ஆப்பில் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்தது. அதை நம்பி மனோகரன் அந்த லிங்கை தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசியவர் ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம். முதலீடு செய்யுங்கள் என்றார். மனோகரனும் முதலில் சிறிய தொகையை முதலீடு செய்தார். அதில் ஓரளவு பணம் கிடைத்தது.அதை நம்பி அவர் தொடர்ந்து அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.22.45 லட்சம் அனுப்பினார். அதில் கிடைத்த லாபத்தை அவரால் எடுக்க முடியவில்லை. பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனோகரன் 2024 டிசம்பரில் சைபர் கிராம் போலீசில் புகார் அளித்தார். ஏ.டி.எஸ்.பி., தெய்வம், இன்ஸ்பெக்டர் விக்டோரியா, எஸ்.ஐ., லாய்டு சிங் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் குஜராத் சூரத்தைச் சேர்ந்த கிஷோர் 28, இதில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் குஜராத் சென்று கிஷோரை கைது செய்தனர்.