திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு மறு ஏலம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு மறு ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏலத்தில் முறைகேடு செய்து ரூ.5 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி துணைமேயர் மீது பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் புதிதாக 34 கடைகள் கட்டப்பட்டன. இந்த கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவரும் கவுன்சிலருமான தனபாலன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 34 கடைகளையும் திறக்க நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதோடு திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் மார்ச் 23ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் 34 கடைகளுக்கும் மறு ஏலம் நடத்த உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு தனபால் தலைமையில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் தனபாலன் கூறியதாவது : 34 கடைகளை ஏலம் விட்டதில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி லாபம் ஈட்டும் வகையில் முறைகேடு நிகழ்ந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மறு ஏலம் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கு ரூ.17 லட்சம் பெற்றுள்ளனர். அதன்படி ரூ.2 லட்சத்துக்கு மட்டும் வரைவோலை பெற்ற துணை மேயர் ராஜப்பா ரூ.15 லட்சத்தை மறைமுகமாக பெற்றிருக்கிறார். இதற்கான முழு ஆதாரங்களும் உள்ளன. தற்போது மறு ஏலம் நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதால் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பணம் முழுவதையும் சம்மந்தப்பட்டவர்களிடம் துணைமேயர் வழங்கிட வேண்டும். நியாயமான முறையில் மறு ஏலம் நடத்திட வேண்டும். மாநகராட்சி முழுவதுமே ஊழலில் நிறைந்துள்ளது. மீண்டும் முறைகேடு நடத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.துணை மேயர் ராஜப்பாவிடம் கேட்டபோது, முறையாக தான் ஏலம் நடத்தப்பட்டு கடைகள் 3 மாதங்கள் வரை செயல்பட்டன. தற்போதைய கவுன்சிலர் தனபால் அப்போது கவுன்சிலர் கூட இல்லை. கடை கேட்டார். ஏலத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினோம். அதன்பின் அரசியல் காழ்புணர்ச்சியோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு தடை பெற்றார். ஏலம் எடுத்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பத்திற்கு உள்ளாகியது இவரால்தான். அப்போதைய கமிஷனர் ,அதிகாரிகள் தான் திண்டுக்கல் மாநகராட்சி கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பினை கோவை பதிப்பை சேர்ந்த செய்தித்தாளில் வெளியிட்டனர். தற்போது மறு ஏலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கவுன்சிலர் தனபால் பேசுவது முழுவதும் பொய். எந்தவித ஆதாரமும் இன்றி குற்றஞ்சாட்டி வருகிறார். முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியாடு செயல்படுகிறார் என்றார் .