மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்: சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி
சாணார்பட்டி:கோபால்பட்டியில் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். துாத்துக்குடிமாவட்டம் திருச்செந்துாரை சேர்ந்தவர் கஜேந்திரன் 32. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி யில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி சத்யா 26. இவர்கள் கோபால்பட்டி எல்லைநகரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். சத்யா 10 மாதங்களுக்கு முன் கர்ப்ப மானார். மகப்பேறு தொடர்பாக டாக்டர்களிடம் சிகிச்சை பெறாத நிலையில் அவரும், கணவரும் தங்களுக்குள் சொந்தமாக சிகிச்சை அளித்தது தெரியவர சுகாதாரத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஒரு மாதமாக அவ்வப்போது நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வலி யுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டிலேயே சிகிச்சை, பிரசவம் பார்த்து கொள்வதாக கூறினர். இந்நிலையில் நேற்று மதியம் பிரசவ வலி வந்ததாக தகவல் கிடைக்க கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி, கோபால்பட்டி அரசு மருத்துவ அலுவலர் பிவின் ஆரோன், டாக்டர் சந்தானக் குமார், செவிலியர்கள், சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன், வி.ஏ.ஓ., சுப்புராஜ் ஆகியோர் சத்யா வீட்டிற்கு வந்தனர். மருத்துவமனையில் சேர வற்புறுத்தினர்.ஆனால் தம்பதி இருவரும் வீட்டை பூட்டி கொண்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் எந்தவித சமரசத்தையும் ஏற்கவில்லை. கஜேந்திரன் தனது அலைபேசி வீடியோகால் மூலமாக யாரிடமோ பேசி மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். பெண் குழந்தை பிறந்தது மாலை 6:30 மணிக்கு குழந்தையின் அழுகுரல் கேட்க இரவு 7:00 மணிக்கு ஒரு வழியாக வீட்டின் கதவை கணவன், மனைவி திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பெண்குழந்தை பிறந்திருந்தது. மருத்துவம் அறியாத நபர்கள் பிரசவ விஷயத்தில் அபாயகரமான நட வடிக்கையில் ஈடுபட்டது சுகாதாரத் துறையினர், பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.