வெளி மாநிலத்தொழிலாளர்கள் வேடசந்துாரில் அதிகரிப்பு
வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சில மாதங்களாக வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை ஒன்றிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன் 40க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் தொடங்கப்பட்டன. இங்கு ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் வேலை செய்கின்றனர். நுாற்பாலைத் தொழிலில் 15 ஆண்டுகளாக ஆண், பெண் தொழிலாளர்கள் படிப்படியாக நின்று விட்ட நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து இளம் தொழிலாளர்களை அழைத்து வந்து ஆலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. தற்போது பெரும்பாலான நுாற்பாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் பெரும்பான்மையாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கொடுத்து பணி வழங்குவதால் வெளிமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.இவர்களைப் பணியில் அமர்த்துவதற்காகவே புரோக்கர்கள் கடும் முயற்சி செய்கின்றனர். ஆலை அதிபர்களும் குறைவான சம்பளமாக இருப்பதால் வடமாநிலத்தவர்களை பணியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வேடசந்துார் சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் திரிகின்றனர்.