பழநியில் நீதிமன்ற கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
பழநி : பழநியில் உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பழநி முருகன் கோயில் அடிவாரம் கிரி வீதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று (செப்.20. ) கிரி விதி பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதன் பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி மனு அளித்தனர். என் மண் என் உரிமை அமைப்பினர் பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் ஊர்வலமாக வந்து நீதிபதி குழு ஆலோசனை நடத்திய தண்டபாணி நிலைய பகுதியில் திரண்டனர். இவர்களில் முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசிய நீதிபதி, என் மண் என் உரிமை அமைப்பினர் வழங்கிய மனுவை பெற்று கொண்டார். இது போல் 300க்கு மேற்பட்டோர் வழங்கிய மனுக்களையும் பெற்றுக் கொண்டார். பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ் கூறியதாவது,மக்களின் தேவைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க என் மண் என் உரிமை குழுவின் சார்பாக 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.