வக்ப் திருத்த சட்டம் ஒருவகை புல்டோசர் சொல்கிறார் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,
திண்டுக்கல்: '' தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் எந்த குறையும் இல்லை. வக்ப் திருத்த சட்டம் ஒருவகை புல்டோசர் தான்'' என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜூலை 6ல் மதுரையில் ஊர்வலம் , மாநாடு நடக்கிறது.இஸ்லாமியர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஓரங்கட்டப்படுகிறனர். சமூக பொருளாதாரம், கல்வியிலும் இஸ்லாமியர்கள் பின்தங்கி உள்ளனர். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் புல்டோசர்களை வைத்து மசூதிகள் இடிக்கப்படுகின்றன. வக்ப் திருத்த சட்டமும் ஒரு வகை 'புல்டோசர்'தான்.தி.மு.க., காங்., அ.தி.மு.க., எந்த கட்சியாக இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை சொன்னப்புள்ளி விவரம் தவறு. இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. குற்றங்கள் எதார்த்தமாக நடக்கும் விஷயம்.இருப்பினும் தவறுசெய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுகிறது. இந்த ஆட்சியில் குறை இல்லை.அண்ணா துரை, ஈ.வெ.ரா., வரலாற்றை மாற்றுவதற்கு பா.ஜ., விரும்புகிறது. அ.தி.மு.க., பா.ஜ., விற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளது.2026 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவோம் என்றார்.