நீர் வரத்தின்றி குட்டையாகும் கலிக்கநாயக்கன்பட்டி குளம்
பழநி: பழநி அருகே கலிக்க நாயக்கன்பட்டி குளத்திற்கு நீர் வரத்தின்றி குட்டையாக காட்சி தருவதால் பொன்னாபுரம் குளத்தில் இருந்து புதிய வரத்து வாய்க்கால் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே கலிக்கநாயக்கன்பட்டி குளம் உள்ளது. இக்குளத்திற்கு பொன்னாபுரம் குளத்தில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. இது நிறைந்த பிறகு குரும்பபட்டி குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. இந்த குளத்தில் இருந்து நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது குளத்திற்கு நீர் வரத்தின்றி புதர் மண்டி குட்டை போல் காட்சியளிக்கின்றன. குளத்தில் ஆக்கிரமிப்பு, குளத்தின் கரைகளை சீரமைக்காமல் புதர்மண்டி இருப்பது, மதகு பிரச்னை ஆகியவற்றாலும் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.