முருகன் கோயில்களில் இன்று கந்த சஷ்டி விழா தொடக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் இன்று கந்த சஷ்டி விழா துவங்குவதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்புவழிபாடு, சுவாமி புறப்பாடு, சிறப்பு அலங்காரம்,அபிஷேகங்கள் நடக்க உள்ளது. பக்தர்களும் காப்பு கட்டி சஷ்டிவிரதத்தை தொடங்க உள்ளனர்.கந்த சஷ்டி விழாவையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் இன்று காலை 7: 00 மணிக்கு யாகபூஜையோடு சஷ்டி தொடங்க உள்ளது. தொடர்ந்து சக்தி வேலனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள்,மயில்,வேல், நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடக்கிறது. பின்னர் தீபாராதனை காட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்க உள்ளனர். மதியம் 1: 30 மணி வரை பூஜைகள் நடக்கிறது. மதியம் 4:00 மணிக்கு மீண்டும் யாக பூஜை தொடங்குகிறது. சிறப்பு வழிபாடு, அபிஷேகம், தீபாராதனைகள், மாலை 6:30 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடக்கிறது. தொடர்ந்து என்.ஜி.ஓ.,காலனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், கந்தகோட்டம் முருகன் கோயில், பாதாள செம்பு முருகன் கோயில்,பழநி முருகன் கோயில் என மாவட்டம் முழுவதிலும் உள்ள முருகன் கோயிலில் கந்த சஷ்டி பூஜைகள்நடக்கிறது.