உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எம்.பி., எம்.எல்.ஏ., பதவிக்காக சுயமரியாதையை இழக்க கூடாது சொல்கிறார் கிருஷ்ணசாமி

எம்.பி., எம்.எல்.ஏ., பதவிக்காக சுயமரியாதையை இழக்க கூடாது சொல்கிறார் கிருஷ்ணசாமி

திண்டுக்கல்: ''எம்.எல்.ஏ., எம்.பி., பதவிக்காக சுயமரியாதையை இழந்து கொத்தடிமையாக இருக்க கூடாது,'' என, திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. 2008ம் ஆண்டு பட்டியல் பிரிவில் அடங்கிய தேவேந்திர குல வேளாளர்கள், ஆதிதிராவிடர்களுக்கான 18 சதவீத ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு தனியாக 3 சதவீதம் என தி.மு.க., ஆட்சியில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அருந்ததியர்களுக்கு கொடுக்கப்படும் 3 சதவீதத்திற்கும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் எப்போதெல்லாம் காலிபணியிடங்கள் உருவாகிறதோ அப்போதெல்லாம் அருந்ததியினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றனர். அவர்களுக்கு மட்டும் அதிக அளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர்கள், ஆதிதிராவிடர்களின் ஒட்டுமொத்த வாய்ப்பு அருந்ததியினருக்கு மட்டுமே கிடைப்பதற்கான சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், தென் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டுகொள்ளாத காவல் துறையை கண்டித்தும் நவ.,7 சென்னையில் பேரணி நடத்தப்படும்.விமானப் படை சாகச நிகழ்வில் 5 பேர் இறப்புக்கு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வருக்கு பதில் தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளிப்பதை ஏற்க முடியவில்லை. முறையான முன்னேற்பாடு செய்யாததே இறப்புக்கு காரணம்.தி.மு.க.,வினர் எதை சொன்னாலும் மக்கள் நம்பி விடுவர் என நினைக்கின்றனர். டாஸ்மாக் நடத்துவது முதல் மதுபான அலை நடத்துபவர்கள் யார் என தெரிந்தால் புரியும். நீட் தேர்வு என்றால் மாநில அரசிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்கின்றனர். மது விலக்கு என்றால் மத்திய அரசை கைகாட்டுகின்றனர்.தமிழகத்தில் 2026 ல் குறைந்தபட்ச செயல் திட்டங்களுடன் கூடிய கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். ஜனநாயக ரீதியாக முற்போக்கு திட்டங்கள், இலவசங்கள் இல்லாத மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் உள்ளடக்கிய ஆட்சிக்கான கூட்டணி அமைய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி