மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கு தாமதமாக வந்தவர்கள் மறியல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குரூப் 4 தேர்வுக்கு தாமதமாக வந்த நிலையில் அவர்களை அனுமதிக்காததால் 20பேர் மறியலில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 121 இடங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நடந்தது. 41,456 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.திண்டுக்கல் ஜி.டி.என்., சாலை எம்.எஸ்.பி.,சோலை நாடார் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் 300க்கு மேற்பட்டோருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 8:00 மணி முதலே தேர்வர்கள் பள்ளிக்கு வந்தனர். காலை 9:00 மணிக்கு தேர்வு மையக்கதவு மூடப்பட்டது. இதன் பின் தாமதமாக வந்த 20 பேரை அனுமதிக்கவில்லை. பள்ளி வாயிலை முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தாலுகா போலீசார் சமாதானப்படுத்தினர். இதில் பெண் தேர்வர்கள் கதறி அழுதனர்.அவர்கள் கூறுகையில், 'தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் மையத்தில் ஆஜராக விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 8:55 மணிக்கு வந்தவர்களை கூட அனுமதிக்கவில்லை. பள்ளி முன்பு பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டதால் சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் மாற்றுப்பாதை வழியாக பள்ளி வந்து சேர்வதற்கு சில நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. இதை எடுத்துச்சொல்லியும் அனுமதிக்க மறுத்துவிட்டனர்,'என்றனர்.வடமதுரை : வடமதுரையில் 3 பள்ளிகளில் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிலர் மையம் இருக்குமிடம் குறித்து சரிவர கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இவர்கள் வேடசந்துார் மையங்களுக்கு சென்றுவிட்டு அங்கு சென்ற பின்னரே மையம் இருக்கும் ஊர் வடமதுரை என தெரிந்தது .அதன் பின்னர் அவசர கதியில் வடமதுரை வந்தனர். 9:00 மணிக்கு பின் வந்ததால் அனுமதிக்கவில்லை. இதனால் 10 பேர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.