உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் சூழல் காப்போம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் சூழல் காப்போம்

செம்பட்டி 'சூழல் காப்போம்' அமைப்பினர், சுற்றுச்சூழல் மாசுபடுத்தலை தவிர்க்கும் நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளால் சாதனை படைத்து வருகின்றனர்.சமீபத்திய தலையாய பிரச்னை தண்ணீர் தட்டுப்பாடு. மழையின்மை மட்டுமின்றி அபரிமித பருவகால தாக்கமே அடிப்படை. மரங்கள் அழிப்பு, செயற்கை உரம், பூச்சி மருந்துகள், பாலிதீன் எரிப்பு, மக்கா கழிவுகள், அதிகரிக்கும் வாகன புகை போன்றவற்றால் காற்று, நீர், வான், நிலத்தை மாசுபடுத்தி வருகிறோம். நிலத்தடி நீரை காப்பதிலும், உயர்த்துவதிலும் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. மாவட்டத்தின் பல்வேறு தனியார் அமைப்புகள், பசுமையை வளப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.இந்நிலையில், செம்பட்டி 'சூழல் காப்போம்' அமைப்பினர், சூழல் விழிப்புணர்வுடன் மாணவர்களுக்கான உதவி, கல்விச் சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மழையையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் பசுமை சூழலை உருவாக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் பனை விதை தயாரித்து மலைப்பகுதியில் தூவும் முயற்சியில் வெற்றி கண்டனர். செம்பட்டி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளிலும் பசுமையை பரப்பும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.பள்ளி, கல்லூரி, அரசுத்துறை மட்டுமின்றி விருப்பமுடைய தனிநபர் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் மரம் வளர்ப்பை ஊக்குவித்து மரக்கன்று வழங்கி, நடவு, விழிப்புணர்வு சார்ந்த நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து தூய்மை காவலர்கள், மருத்துவ பணியாளர்களை ஊக்குவித்தும் வருகின்றனர். இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு பொது அறிவு போட்டிகள், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆர்வலர்களுக்கான விருது வழங்கல் என்பன உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்னறனர்.இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவித்து, மண்ணை வளமாக்கும் சாத்தியக்கூறுகளும் முடுக்கி விடப்படுகின்றன. நிலத்தடிநீர் பாதிப்பு மட்டுமின்றி நஞ்சாக மாற்றும் பாலீதினை பயன்பாட்டில் இருந்து அகற்ற மஞ்சப்பை உபயோகத்தை வலியுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இயற்கையின் மகத்துவத்தை உணர வேண்டும்

கண்மணி, ஒருங்கிணைப்பாளர், சூழல் காப்போம் அமைப்பு : இயற்கையின் மகத்துவத்தை இன்னும் நாம் உணர வேண்டியுள்ளது. மாசில்லா சமுதாயம் என்பது மரக்கன்று நடவு, மரம் வளர்ப்பு முறைகள் மட்டுமின்றி நிலத்தை விஷமாக்கும் நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும். மாணவர் குழுவினருடன் சுற்றுச்சூழல் மீட்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக 'மரக்கன்றும் மஞ்சப்பையும்' என்பது தனி இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் உலக வெப்பமயமாதலை தவிர்க்கும் பொருட்டு அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. உணவு பொருட்கள் விற்பனை கடைகளில், மஞ்சப்பை, தூக்கு வாளி பயன்பாடுகளை ஊக்குவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமங்களிலும் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை மாணவ சமுதாயத்தில் விதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலித்தீன் ஒழிப்பு, புகையில்லா சூழல், மஞ்சப்பை பயன்பாட்டின் அவசியம், மரக்கன்று நடவு பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தொடர் விழிப்புணர்வு

--கிருஷ்ணபாண்டி, தன்னார்வலர், செம்பட்டி: மஞ்சப்பை உபயோக அவசியத்தை, அனுபவபூர்வமாக அறிந்துகொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். வாசிப்பு திறன், புதிர், நடப்பு அறிவியல் கண்டுபிடிப்புகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம். மாணவர்களை கொண்டு மரக்கன்றுகள் நடவு, சுற்றுச்சூழலில் பாலிதீன் குறித்த விழிப்புணர்வு, தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் சார்ந்த பிரசாரம், மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தல், குப்பைகளை தரம் பிரித்து வழங்க வழிகாட்டுதல், தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஆலோசனை முகாம்கள் நடத்தி வருகிறோம்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !