உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உள்ளன்போடு உதவும் லயன்ஸ்... உன்னத மகிழ்ச்சியில் மக்கள்

உள்ளன்போடு உதவும் லயன்ஸ்... உன்னத மகிழ்ச்சியில் மக்கள்

திண்டுக்கல்

இன்றைய இயந்திர உலகில் சமூகத்தின் மாற்றத்திற்கும், மனிதர்களின் வாழ்க்கை மேம்படவும் அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது லயன்ஸ் சங்கங்கள் . அரசியல் கலக்காமல் பொதுமக்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணத்தோடு லயன்ஸ் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படும் சங்கங்கள் ஒன்றிணையும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடந்தது. மதர் தெரசா மண்டல சந்திப்பு என்ற பெயரில் நடந்த இந் நிகழ்ச்சியில் 23 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் பங்கேற்றோர் தெரிவித்த கருத்துக்கள் இதோ...

பிரச்னை தீர்வுக்கு அமைப்பு

குமார், மதர் தெரசா மண்டல தலைவர், லயன்ஸ் இன்டர்நேஷனல் : அமெரிக்கவில் மெல்வின் ஜோன்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பன்னாட்டு லயன்ஸ் சங்கம் தற்போது உலக நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டு நல்ல முறையில் பல சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை மனம் விட்டு பேசி கலந்துரையாடும் அமைப்பை ஏற்படுத்துகிறோம். இதில் கட்சி, அரசியல், மத பாகுபாடுகள் ஒருபோதும் விவாதிக்கப்படாது. இதில் நலத்திட்ட உதவிகள் செய்ததோடு சமூகப்பணி செய்பவர்களும் ஊக்குவிக்கப்பட்டனர்.

சேவை செய்ய ஊக்கம்

காமராஜ், செயலாளர், ஜெம் லயன்ஸ் சங்கம் : நாம் வாழும் காலங்களில் நமது குடும்பத்திற்கு செலவழித்தது போக பொது சேவைகளுக்கும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் சங்க உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். அதனாலே வாழ்வில் அவர்களுக்கு ஆன்மிக திருப்தி அளிக்கிறது. வாழ்வில் நிலையாக இருப்பது தான் அனைவருக்கும் செய்யும் நல்ல சேவை மட்டுமின்றி செயலுமாகும். மதர் தெரசா மண்டல மாநாடு வாயிலாக எண்ணற்ற உதவிகளை செய்துள்ளோம். பலரை சேவை செய்ய துாண்டும் வகையில் ஊக்கப்படுத்தி உள்ளோம்.

வியாபாரிகளுக்கு நிழற்குடை

லைலா அபுசக்மான், முன்னாள் தலைவர், ஜெம் லயன்ஸ் சங்கம் : பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, பெண்களுக்கு மருத்துவ உதவி தொகை, மரக்கன்றுகள் வழங்கல், பாதசாரி வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல் என பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றது. கண் சிசிக்சை முகாம் தொடங்கி ஆதரவற்றவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் பல்வேறு உதவிகளை லயன்ஸ் சங்கங்கள் செய்து வருகின்றன.

மக்களே அணுகுகின்றனர்

ஏ.ரவிச்சந்திரன், நடத்துனர் குழு தலைவர், மதர் தெரசா மண்டலம் : அரசு ,ஜெம் லயன்ஸ் சங்கம் இணைந்து மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அரசு உதவி , மருத்துவ உதவி என எது வேண்டுமானாலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து எங்களை மக்கள் அணுகுகின்றனர். நாங்களும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறோம். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவிகள் வேண்டுமானால் ஜெம் லயன்ைஸ அணுகலாம் என்ற அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

20 அடி உயரமாக வளர்ந்த 5000 மரக்கன்றுகள்

கே.பி.கணேசன், முன்னாள் தலைவர், ஜெம் லயன்ஸ் சங்கம் : ஒருகாலத்தில் எல்லா இடத்திலும் தாராளமாக கிடைத்த குடிநீர் இன்று பாட்டிலில் அடைத்து விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலமை இருக்கிறது. வருங்காலம் எப்படி என தெரியவில்லை. சுவாசிக்க தேவையான காற்று இயற்கையாக கிடைக்கிறது. கொரோனா காலத்தில் ஆக்சிஜன் கிடைக்க பெரும் சிரமப்பட்டோம். எதிர்காலத்தில் பாட்டிலில் அடைத்து முதுகில் கட்டி சுவாசிக்கும் நிலமை கூட வரலாம். இதைக்கருத்தில் கொண்டு தான் திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் 5000 மரக்கன்றுகள் நட்டதில் இன்று 20 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகின்றன. இது பின்னால் வரும் சந்ததியினருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை