முன்னாள் மாணவர் சங்கங்களை இயக்கமாக வலுப்படுத்த வேண்டும் லோக் ஆயுக்தா நீதிபதி அறிவுறுத்தல்
பழநி,: முன்னாள் ஆசிரியர் சங்கங்களை மாணவர் இயக்கமாக வலுப்படுத்த வேண்டும் என லோக் ஆயுக்தா நீதிபதி ராமராஜ் தெரிவித்தார்.பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் தலைமையாசிரியர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி ராமராஜ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, 'பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கி உள்ளது. இங்கு படித்த மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசில் பெரும் பதவியில் உள்ளனர். நூற்றாண்டு விழா நடத்துவது தற்போது அவசியமாக உள்ளது. நவம்பரில் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள நிலையில் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, விழா நடத்த ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற வேண்டும், உள்ளூர், வெளியூர் முன்னாள் மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு உதவும் வகையில் முன்னாள் மாணவர் சங்கங்களை வலுப்படுத்தி இயக்கமாக மாற்ற வேண்டும். அரசின் கல்விக்கூடங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், ஆசிரியர் நந்திவர்மன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிவனேசன் கலந்து கொண்டனர்.