அரசியல் விளம்பரம் தேடும் முயற்சி பயன் தராது முன்னாள் அமைச்சருக்கு மேயர், துணைமேயர் பதில்
திண்டுக்கல்: ''அரசியல் விளம்பரம் தேடும் முயற்சி பயன் தராது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசனுக்கு மாநகராட்சி தி.மு.க., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா பதிலளித்துள்ளனர்.அவர்களது அறிக்கை : திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய கூட்ட அரங்கு ரூ.39 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நகர்மன்ற கூடம் என பெயர் சூட்டுவதற்கு 2013- ஜூனில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அனுமதி பெறப்பட்டு, 2013- ஜூலையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பதிவிற்கும், பார்வைக்கும் வைக்கப்பட்டது என்றும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூட்ட அரங்கிற்கு 2014ல் தான் நிர்வாக அனுமதி, 2015- ல் தொழில் நுட்ப அனுமதி வழங்கப்பட்டு கட்டடப் பணிகள் 2016ல் முடிவுற்று 2017 - ல் திறப்பு விழா செய்யப்பட்டது என அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறி உள்ளார்.அந்த காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தாததால் எந்த கூட்டமும் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு புதிய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே புதிய மாமன்ற கூட்டத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றதை அனைவரும் அறிவார்கள். இதுநாள் வரை புதிய கூட்ட அரங்கிற்கு யாருடைய பெயரும் சூட்டப்படவில்லை . சீனிவாசன் அறிக்கை உண்மைக்கு புறம்பானது. அரசியல் விளம்பரம் தேடும் முயற்சி பயன் தராது என குறிப்பிட்டுள்ளனர்.