ஆத்துார் தொகுதியில் 2 ஆயிரம் கனவு இல்ல வீடுகள் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
கன்னிவாடி:''நடப்பாண்டில் ஆத்துார் தொகுதியில் மட்டும் அரசின் 2 ஆயிரம் கனவு இல்லம் திட்ட வீடுகள் வழங்கப்பட உள்ளதாக,'' அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் திண்டுக்கல் ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமையில் நடந்தது. மனுக்களை பெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், 2024--25ம் நிதி ஆண்டிற்கான அரசின் கனவு இல்ல வீடுகள் திட்டத்தில் தற்போது 10 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டு பணிகள் முடிந்து பயனாளிகள் குடியேறிவிட்டனர். நடப்பாண்டில் ஆத்துார் தொகுதியில் மட்டும் 2 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட உள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., ஆட்சியில் ஏழை முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை அ.தி.மு.க., அரசு நிறுத்தியது. தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது என்றார். தாசில்தார் ஜெயபிரகாஷ் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் மலரவன், கண்ணன் பங்கேற்றனர்.