கடை லைசென்ஸ் முறையை எளிமையாக்கி உள்ளோம் சொல்கிறார் -அமைச்சர் பெரியசாமி
திண்டுக்கல்,:''அ.தி.மு.க., ஆட்சி காலத்திலிருந்த கிராம சிறு கடை லைசென்ஸ் முறையை எளிமையாக்கி உள்ளோம் ''என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி பேசினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: கிராமத்தில் உள்ள டீக்கடை, பெட்டிக்கடை என அனைத்திற்கும் லைசென்ஸ் வாங்க தி.மு.க., அரசு கூறுவதாக பழனிசாமி கூறுகிறார். அ.தி.மு.க., ஆட்சிக்காலத்திலும் இந்த முறை இருந்தது. அச்சட்டம் பற்றி அவருக்கு தெரியவில்லை. 1958ல் பஞ்சாயத்து யூனியன் சட்டத்தில் டீக்கடை அனுமதியில் ஆபத்து, குற்றம் என இருந்தது. டீக்கடை ஆரம்பித்தால் குற்றம் என்று இருந்தது. நான் அமைச்சர் ஆன பின்பு தான் அபாயகரம், குற்றம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு வியாபாரம் என மாற்றப்பட்டது. 3,45,000 பேர் 1958 ல் இருந்தே லைசென்ஸ்க்கு பணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்டிற்கு ரூ. 24 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. பழனிசாமி ஆட்சி காலத்திலும் இது இருந்தது. புதிதாக நாங்கள் எந்த வரியும் விதிக்கவில்லை. வியாபார உரிமம் என டீக்கடை ரூ.250 கட்டினால் மூன்று ஆண்டுக்கு அதனை வைத்து கொள்ளலாம். இது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக டீக்கடையில் பாய்லர் வைத்திருந்தால் அது வெடித்து இறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. என்பதினால் ஆபத்து மற்றும் குற்றம் என்று வைத்திருந்தனர். அதை தற்போது மாற்றி இருக்கிறோம். சொற்களை மாற்றி, உரிமத்திற்கான காலம் ஓராண்டு என்பதை மூன்றாண்டு என மாற்றி உள்ளோம். கிராமப்புற சிறு கடைகளை எந்த அதிகாரிகளும் சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவே மாற்றப்பட்டுள்ளது. ஓய்வூதியம் குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஆலோசனை பெற்று வழங்க முதல்வர் தயாராக இருக்கிறார். பிரச்னைகளை அனைவரிடமும் கலந்து பேசி முடிவு எடுக்கிற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். இவ்வாறு கூறினார்.