குழந்தைகள் கண் முன் துாக்கிட்டு தாய் தற்கொலை கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நிலக்கோ ட்டை : குழந்தைகள் கண் முன் துாக்கிட்டு தாய் இறந்த நிலையில் அவரது கணவர், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகாரளித்துள்ளார்.வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்தவர் பிரசித் சந்திரன் 38. இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அஜித்ரா 30, மனைவியும் 12 வயதில் ஒரு மகள், 9 வயதில் ஒரு மகன் உள்ளனர். ஜூன் 25ல் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தனபாண்டியம்மாள், இவரது மகன் தினேஷ்குமார் ஆகிய இருவரும் கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு ஆபாசமாக திட்டியதால் அவமானம் தாங்காமல் அஜித்ரா குழந்தைகள் கண் முன் துாக்கிட்டு இறந்தார்.இந்நிலையில் பிரசித்சந்திரன் நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் கொடுத்த மனுவில்,எனது மனைவி அஜித்ரா தற்கொலைக்கு காரணமாக இருந்த தனபாண்டி அம்மாளிடம் ரூ. 2 லட்சம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 20 சதவீத வட்டியாக இதுவரை 4 லட்சத்திற்கு மேல் கொடுத்துள்ளோம். சில மாதங்களாக உடல் நிலை,மருத்துவ செலவுகள் ,குடும்ப நெருக்கடிகள் காரணமாக வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.மனம் உடைந்த என் மனைவி குழந்தைகள் கண் முன்னே துாக்கிட்டு இறந்தார். இறக்கும் வரை கதவு முன்பே தினேஷ்குமார் நின்று இருக்கிறார். ஆனால் இதை வத்தலக்குண்டு போலீசார் சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை, போக்சோ, கந்து வட்டி தடுப்பு சட்டம் போன்ற பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. மேற்கண்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து எனது மனைவியின் இறப்பிற்கு நீதி வழங்கும் படி கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.