சுற்றுலாத்தலமாகிறது இடையகோட்டை நங்காஞ்சி அணை
இடையகோட்டை: இடையகோட்டை நங்காஞ்சி அணையை சுற்றுலாத் தலமாக்க ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டை ஊராட்சியில் நங்காஞ்சிஅணை அமைந்துள்ளது. இந்த அணை சுற்றுலாதலம் ஆக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி வாக்குறுதி அளித்திருந்தார். சட்டசபையில் கோரிக்கை வைத்ததால் சுற்றுலாத்தலமாக்க அறிவிப்பு வெளியானது. அதன்படி இங்கு ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுப் பூங்கா, ரோடு, நவீன கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிற்றுண்டி கடை உட்பட பல்வேறு நவீன வசதிகளுடன் சுற்றுலா தலம் அமைய உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், பொறியாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் கலந்து கொண்டனர்.