இல்லை முன்னேற்றம் பழநி – ஈரோடு புதிய ரயில் பாதை திட்டத்தில்... போதிய நிதி ஒதுக்கி செயல்படுத்த கோரிக்கை
பழநி: பழநி- – ஈரோடு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பழநியில் இருந்து ஈரோடு வழியாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் 1922ல் பிரிட்டிஷ் காலத்திலேயே தயாரானது. பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன நிலையில் 1982- – 1986 இடைப்பட்ட ஆண்டுகளில் இதற்கான ஆய்வு நடந்தது. அதில் ஈரோட்டில் இருந்து சென்னிமலை, காங்கேயம், பெருந்துறை, தாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழநியை அடையும் வகையில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 480 ஹெக்டர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, 91.5 கி.மீ., துாரம் புதிய ரயில் பாதை அமைக்க நிதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து 2005 – -2006 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளுக்கு அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு 2008 – 20-09 பட்ஜெட்டில் மத்திய அரசு சிறிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்தது. ரயில் பாதையின் இறுதி வடிவத்திற்கு ஒப்புதலும் பெறப்பட்டது. அதில் 6 பெரிய பாலம், 42 சிறிய பாலம், 23 ரயில்வே கதவுகள் அமையும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பழநி – ஈரோடு புதிய ரயில் பாதை திட்டத்திற்காக 2011 பட்ஜெட்டில் ரூ.50 கோடி, 2024 பட்ஜெட்டில் ரூ.100 கோடி என ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிறு தொகை ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இத்திட்ட பணியில் பெரிய முன்னேற்றம் இல்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த ரயில் பாதை திட்டம் அமைவதன் மூலம் விவசாயம், சுற்றுலா, வியாபாரம், உட்கட்டமைப்பு ஆகியன வளர்ச்சி அடையும். கொடைக்கானல் சுற்றுலா தலம் மேம்படும். ஜவுளிக்கு பெயர் பெற்ற சின்னாளப்பட்டி, ஈரோடு, சேலம், திருப்பூர் இடையே தொழில் வழித்தடம் ஏற்படும். ஒட்டன்சத்திரம், உடுமலை, பழநி பகுதியில் இருந்து ஈரோடு சந்தையை எளிதில் அணுகலாம். பல கோடி ரூபாய்க்கு தொழில்வளம் பெருகும். பழநி, சென்னிமலை கோயிலுக்கு வடமாநிலங்களில் இருந்து பக்தர்கள் எளிதாக வந்து செல்வர். பழநியில் இருந்து ரயில் மூலம் ஈரோடு செல்லும் தொலைவு 36 கி.மீ., துாரம் குறையும். கேரளத்துடன் ஈரோடு வணிகம் அதிகரிக்கும். பயண கட்டணமும் குறையும். மக்கள் தொகை பெருக்கத்தால் இடைபட்ட மாவட்டங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே பழநி – ஈரோடு புதிய ரயில் பாதை திட்டத்திற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, இதனை விரைந்து செயல்படுத்த ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.