பழநி பெருந்திட்டத்திற்கும் நகராட்சிக்கும் சம்பந்தமில்லை
திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியால் பழநி பெருந்திட்ட வரைவு திட்டத்திற்கும் நகராட்சிக்கும் சம்பந்தமில்லை என பழநி நகராட்சி விளக்கம் அளித்துள்ளது.பழநியில் பெருந்திட்ட வரைவு என்ற பெயரில் முருகன் கோயிலை சுற்றிய குறவன்பாறை, சன்னதிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, அருள்ஜோதி வீதி என 5 முக்கிய வீதிகளை முழுமையாக அகற்றப்போவதாக வெளியான வரைபடத்தை குறிப்பிட்டு காட்டி தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பழநி நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் கூறியதாவது: 5 முக்கிய வீதிகளை அகற்றப்போவதாக வரைபடம் வெளியாகி இணையத்தில் பரவியதால் பொதுமக்கள் மத்தியில் உலாவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட வரைபடம் முற்றிலும் தவறானது. வேறொரு அலுவலக பயன்பாட்டிற்காக தயார் செய்த வரைபடம் தான் அது. இதை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. பழநி பெருந்திட்ட வரைவுக்கும், நகராட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நீதிமன்ற உத்தரவின் படி அனுமதியற்ற கட்டுமான நடவடிக்கை அறிவிப்பு மட்டுமே நகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது என்றார்.