ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பழநி
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வரும் நிலையில் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனர். பழநி அடிவாரம் இட்டேரி ரோடு, அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, ஆண்டவன் பூங்கா ரோடு ஆகியவற்றில் தற்காலிக கடைகள் திடீரென முளைத்துள்ளன. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளியூர், உள்ளூர் பயணிகள் அருள்ஜோதி வீதி, ஆண்டவன் பூங்கா ரோடு, அடிவாரம் இட்டேரி ரோடு பகுதிகளில் வாகனங்களை இயக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆர்.எப் ரோடு, ராஜாஜி ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு தலைமை தபால் நிலைய சாலை, திருவள்ளுவர் சாலை உழவர் சந்தை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு, இரு புறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களை நிறுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர கடைகளை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.