ஊராட்சிகளில் இல்லை அடிப்படை வசதிகள்; நடவடிக்கை எடுக்கலாமே மாவட்ட நிர்வாகம்
மாவட்டம் முழுவதும் 300க்கு மேலான ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பகுதிகளில் பல இடங்களில் மண் ரோடுகள் மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு மழைநீர் மண் ரோடுகளில் தேங்கி சகதியாக மாறி மாதக்கணக்கில் மக்கள் நடக்க முடியாமல் திணறுகின்றனர். டூவீலர்களில் செல்வோர் சகதிகளில் தடுமாறி கீழே விழும் நிலையும் அடிக்கடி நடக்கிறது. பொறுமை இழந்த மக்கள் ஊராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுகின்றனர். இருந்தபோதிலும் மக்கள் மீது ஊராட்சி அதிகாரிகள் கவனம் திரும்பாமல் இருப்பதால் இன்னும் மண் ரோடுகளாகவே பல ஊர்கள் உள்ளன. இது ஒருபுறம் இருக்க தெருவிளக்குகள்,சாக்கடை வடிகால்கள்,குடி தண்ணீர் வசதிகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளுமே முறையாக செய்யாமல் இருப்பதாலும் மக்கள் அங்கு குடியிருக்கவே அச்சப்படுகின்றனர். அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எப்போதாவது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வந்து ஆய்வு செய்கின்றனர். ஆனாலும் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை என பொது மக்கள் புலம்புகின்றனர். எப்போது தான் விடிவுகாலம் பிறக்கும் என பல ஊராட்சிகளில் மக்கள் காத்திருக்கும் அவலமும் நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.