மின்சாரம் கட்டண பாக்கியால் திணறும் ஊராட்சிகள்; கடன் மேல் கடன் ; விவசாய இலவச மின்சாரம் போல் வழங்க வலியுறுத்தல்
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளில் மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் என 90 சதவீத ஊராட்சிகள் கடனில் உள்ளன. ஊராட்சிகளின் நலன் கருதி விவசாயத்திற்கு வழங்குவது போல் ஊராட்சிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ள நிலையில் இதன் பராமரிப்புக்காக வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானிய நிதியும் மக்கள் தொகை அடிப்படையில் வழங்கும் நிலையில் சில ஆண்டுகளாக குறைந்த அளவிலே நிதி வழங்கப்படுவதாக குமுறல் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீருக்கான பைப் லைன்கள் , குடிநீர் மின் மோட்டார்களை பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை முறையாக கவனிக்க முடியாமல் நிதி பற்றாக்குறையால் தவிக்கின்றன.ஊராட்சி பகுதிகளில் குடிநீர்,தெருவிளக்குகளை 100 சதவீதம் பராமரிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு போதிய நிதி ஒதுக்காததால் ஊராட்சிகளில் மின் கட்டணம் பாக்கியும் அதிகரித்து வருகிறது. இதை காரணம் காட்டி மின் கட்டணத்தை குறைக்க நினைத்த அரசு நிர்வாகம், செயல்படாத போர்வெல் மின் மோட்டார்கள், பொது டிவி ரூம்களுக்கான மின் இணைப்பை 2023லே துண்டித்து விட்டது. இருந்தும் ஊராட்சிகள் சார்பில் செலுத்த வேண்டிய மின் கட்டணம் பாக்கி அதிகரித்த வண்ணமே உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீதம் ஊராட்சிகளில் குறைந்தது ரூ.4 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை மின் கட்டணம் பாக்கியுள்ளது. இதேபோல் காவிரி குடிநீர் திட்டத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணமும் பாக்கி உள்ளது. இதற்கெல்லாம் ஒற்றை தீர்வாக விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இலவச மின்சாரத்தை போல் ஊராட்சிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்..........
குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு
தமிழக அரசு மின் கட்டணம் , காவிரி குடிநீர் திட்ட கட்டண நிதிக்கு என அக்கவுன்ட் எண் 2 ஐ ஓபன் செய்துள்ளது. இதில் சில ஆண்டுகளாக குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியை மின் கட்டணம் , காவிரி குடிநீர் திட்டத்திற்கு தான் பயன்படுத்த முடியும். வேறு பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. சில ஆண்டுகளாகவே 90 சதவீத ஊராட்சிகள் மின் கட்டணத்தை பாக்கியில்தான் வைத்துள்ளன. போதிய வருமானம் இல்லாத ஊராட்சிகளில் குடிநீர் பணிகளை கூட முழுமையாக செய்ய முடியவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவசம் மின்சாரம் போல் ஊராட்சிகளுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் ஊராட்சிகளை கடன் இல்லாமல் செயல்படுத்த முடியும் .எஸ்.மலர்வண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை.......................