உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முடங்கிய அழகாபுரி குடகனாறு அணை பூங்கா; பொழுது போக்கிற்கு வழியின்றி மக்கள் தவிப்பு

முடங்கிய அழகாபுரி குடகனாறு அணை பூங்கா; பொழுது போக்கிற்கு வழியின்றி மக்கள் தவிப்பு

வேடசந்துார் : அழகாபுரி குடகனாறு அணையில் பராமரிப்பின்றி பயன்படாற்று போன பூங்காவை மீண்டும் புதுப்பித்து பொதுமக்கள் சென்று வரும் வகையில் சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் .வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகா பகுதி எப்போதும் வரட்சி பாதித்த பகுதியாகவே உள்ளது. போதிய மழை இல்லாததால் சுற்றுப்பகுதியில் உள்ள எந்த குளங்களுக்கும் நீர் வரத்து இல்லை. இந்நிலையில் ஆத்துார் அணை நிறைந்து குடகனாற்றில் நீர் வரத்து ஏற்பட்டதால் குடகனாறு அணையில் 21.3 அடி தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் கூடுதல் நீர் வரத்து வந்து கொண்டுள்ளது. அணை பகுதியில் ஷட்டர்களும் பராமரிக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.அணைப்பகுதியில் தண்ணீர் தேங்கிய நிலையில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அணையை பார்வையிடுவதற்காக வந்து செல்கின்றனர். அணை பகுதிக்கு வரும் மக்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்கக்கூட வழியில்லை. காரணம் இங்கிருந்த பூங்கா சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியில் மரங்கள் செடி கொடிகள் எல்லாம் காய்ந்து காணாமல் போய்விட்டது. இதனால் தற்போது பூங்கா பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்வதே இல்லை.இப்பகுதி மக்களின் நலன் கருதி அணைப்பகுதியில் உள்ள பூங்காவை மீண்டும் பராமரித்து, நிழல் தரும் மரங்களை வளர்த்து, இருக்கைகள் , குடிநீர் வசதி செய்து நல்ல முறையில் பராமரித்தால் கூடுதலான பொதுமக்கள் வந்து செல்வர். இதேபோல் தாலுகா பகுதி பள்ளி கல்லூரி மாணவர்களும் வந்து செல்வர் .

பராமரிப்பற்று போனது

வி.கருப்பையா, சமூக ஆர்வலர், வேடசந்துார்: வேடசந்துார் தாலுகா பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வரும் வகையில் சுற்றுலா தளம் எதுவுமில்லை. வறட்சி பாதித்த பகுதியாகவே உள்ளது. இங்குள்ள அழகாபுரியில் குடகனாற்றின் குறுக்கே குடகுணாறு அணை கட்டப்பட்ட நிலையில் பூங்காவும் நல்ல முறையில் செயல்பட்டு வந்தது. சுற்றுப்பகுதி மக்கள் சுற்றுலாவுக்கு செல்வது போல் சென்று வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால் பூங்காவே காய்ந்து பராமரிப்பற்று போனது. காணாமல் போன பூங்காவை மீண்டும் உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ஏமாற்றுவதாக உள்ளது

இல.சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: அழகாபுரியில் உள்ள பூங்காவை பராமரித்தாலே அணையை பார்க்க வருவோர் , பூங்காவை பார்க்க வருவோர் என சுற்றுலா தளமாகவே மாறிவிடும். வேடசந்துார் தாலுகா பகுதியில் திருவிழா காலங்கள் , விடுமுறை தினங்களில் சுற்றிப் பார்க்க எந்த இடமும் இல்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருமே கொடைக்கானல் , ஊட்டிக்கு போய் வர முடியாது. இந்தப் பகுதி மக்களுக்கான அணைக்கட்டு வசதி இருந்தும் பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பது, இப்பகுதி மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இனிமேலாவது அரசு நிதி ஒதுக்கி பூங்காவை பராமரிக்க வேண்டும்.

பூங்கா அமைக்க ஏற்பாடு

எஸ்.காந்திராஜன், எம்.எல்.ஏ., வேடசந்துார்: அழகாபுரி அணை பகுதியை முழுமையாக பராமரித்து முழு அளவு நீரை தேக்கி வைக்க வேண்டும் என்ற நல்நோக்கில்தான் தற்போது, பழைய ஐந்து ஷட்டர்கள் புதுப்பிக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பூங்காவை அமைக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். வரும் சட்டசபை கூட்டத் தொடரிலும் இதுகுறித்து பேசி பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி