உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அழகுபட்டி அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு

அழகுபட்டி அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு

ரெட்டியார்சத்திரம்: பட்டத்துநாயக்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் சேதமடைந்த கட்டடங்களை சீரமைப்பு, தரம் உயர்த்த வலியுறுத்தி பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் அழகுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டத்துநாயக்கன்பட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இங்குள்ள கட்டடம் பராமரிக்கப்பட்டு பல மாதங்களான நிலையில், கூரை சேதமடைந்து விழ துவங்கியது. உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. ஆவேசமடைந்த பெற்றோர், நேற்று பள்ளி நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் அலட்சியம்

விஜயசாந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர், பட்டத்துநாயக்கன்பட்டி: மேலாண்மை குழு பொறுப்பேற்று 2 ஆண்டுகளாக, கட்டட சீரமைப்பை வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இப்பள்ளியின் அருகே உள்ள அங்கன்வாடி, கட்டப்பட்டு 3 ஆண்டுகளாகிறது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அடுத்த சில வாரங்களில் சேதமடைந்ததால், தற்போது குழந்தைகள் மற்றொரு அரசு கட்டடடத்தில் வைத்து பராமரிக்கும் நிலை உருவானது. பல மாதங்களாகியும் இதனை சீரமைக்கவோ, அகற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் முகாமிட்டுள்ளன.

தரம் உயர்த்தணும்

முத்துலட்சுமி,குடும்ப தலைவி, பட்டத்துநாயக்கன்பட்டி: பள்ளி அருகே உள்ள பயன்பாடற்ற கட்டடத்தில் இருந்து விஷப் பூச்சி நடமாட்டம் காரணமாக, மாணவர்கள் உயிர் பயத்துடன் கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமைச்சரின் சொந்த தொகுதியாக இருந்த போதும், அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அலட்சியம் நீடிக்கிறது. அச்சம் கொண்ட மனநிலையுடன், மாணவர்களை பள்ளிக்கு பெற்றோர் அனுப்ப வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. தொடர்கல்விக்கு ஏதுவாக, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றார்.ரெட்டியார்சத்திரம் பி.டி.ஓ., மாரியப்பன், பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால், கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி