பராமரிப்பில்லாது முடங்கிய அணைகளையொட்டிய பூங்காக்கள்; கோடை விடுமுறையில் வருவோர் நலன் கருதி சீரமைக்கலாமே
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ள பூங்காக்களை பராமரிப்பதோடு ,மேலும் கூடுதலாக பூங்காக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் நங்காஞ்சி அணை, பரப்பலாறு அணை, மருதாநதி அணை, குடகனாறு அணை, பாலாறு-பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை, வரதமாநதி அணை, காமராஜர் சாகர் அணை, மாவூர் அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. இதில் வரதமா நதி அணை, பாலாறு-பொருந்தலாறு அணை, குடகனாறு அணை பகுதிகளில் பூங்காக்கள் உள்ளது. ஆனால் இதன் உள்கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. போதிய பராரிப்பில்லாமல் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. கோடை காலத்தில் உள்ளூர் வாசிகள் இதனை பயன்படுத்தும் ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது பயன்படுத்த இயலாத சூழ்நிலையில் உள்ளதால் ஏமாற்றமடைகின்றனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்காக்களை சீரமைப்பதுடன் , அணைகளில் சுற்றுலாப் பயணிகள் , உள்ளூர் வாசிகள் பொழுதுபோக்கும் வகையில் கூடுதல் பூங்காக்கள்,பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க முன் வர வேண்டும். இதற்கு சுற்றுலாத்துறை , வருவாய் துறையினர் இணைந்து திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.