அதிகாரிகளை நம்பி நோ யூஸ் அடைப்பை சரி செய்த மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசன் நகர் பகுதியில் ஏற்பட்ட பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய, மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த மக்கள் அவர்களாகவே சரிசெய்து கொண்டனர். திண்டுக்கல் அரசன் நகரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக 25 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நின்றது. கழிப்பறை குழாய் வழியாக வீடுகளுக்குள் புகுந்தது. பாதாள சாக்கடை ஜங்ஷன் பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீர் கால்வாயை துார்வார மாநகராட்சிக்கு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதி மக்களே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தனர். பா.ஜ., மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் துரை கணேசன், '' வரிவசூல், அபராதம் விதிப்பதிலும் வேகம் காட்டும் மாநகராட்சி மக்கள் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. இதனால் நாங்களே சாக்கடை அடைப்பை சரிசெய்தோம் ''என்றார்.