உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தலில் நீடிக்கும் தாமதம்

ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தலில் நீடிக்கும் தாமதம்

ஆத்துார்: ஆத்துார் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 7 ஆண்டுகளாகியும் மாற்று ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தலில் தாமதம் நீடிக்கிறது. 10க்கு மேற்பட்ட கிராம கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்டோர் சித்தையன்கோட்டை வரை அலைக்கழிக்கப்படும் அவலம் நீடிக்கிறது.வட்டார அளவிலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தும் நோக்கில் படுக்கை வசதியுடன் கூடிய அரசு சமுதாய நல நிலையங்களாக தரம் உயர்த்தப்படுகின்றன. சில இடங்களில் தாலுகா தலைநகர் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்போது மாற்று இடத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதனை செயல்படுத்துவதில் ஊழியர் நியமனம், கூடுதல் செலவினம், அதிகாரிகள் அலட்சியம் போன்ற காரணங்களுக்காக அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர். தாலுகா தலைநகராக உள்ள ஆத்துாரில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. முதற்கட்டமாக இதன் பகுதிகளை சித்தையன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைத்தனர். இதன் கட்டுப்பாட்டில் பல துணை சுகாதார நிலையங்கள் இருந்த போதும் மாற்று இடத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் நிறுவுதில் தாமதம் நீடிக்கிறது. தற்போது வரை இதற்கான மாற்று ஏற்பாடு கண்டு கொள்ளப்படாததால் கர்ப்பிணிகள் ,முதியோர் உள்ளிட்டோர் கூடுதல் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இச்சேவைக்காக அலைச்சல்

ராமு, ஒருங்கிணைப்பாளர், அச்சாணி தன்னார்வ அமைப்பு, செம்பட்டி : 2015--16 ஆம் ஆண்டில் தமிழகத்தின் 39 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஆத்துார் ஆரம்ப சுகாதார நிலைய கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சித்தையன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைக்கப்பட்டனர். முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 15க்கு மேற்பட்ட கிராம கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு கால வாராந்திர பராமரிப்பு, மருத்துவ பரிசோதனை, தடுப்பூசி, ஆவண பதிவுகள் போன்றவற்றிற்கான பணிகள் அதிகம் நடைபெற்று வந்தன. அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இச்சேவைகளுக்காக சித்தையன்கோட்டை செல்ல வேண்டியுள்ளது.

வீடு தேடி நோக்கம் பாதிப்பு

க.ஜெயஸ்ரீ, குடும்பத் தலைவி, எஸ்.பாறைப்பட்டி: சித்தையன்கோட்டையில் இருந்தபடியே செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள் தங்களின் கிராமங்களை கவனிக்க வேண்டியுள்ளது. இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட பணிகளிலும் தொய்வு, அலைக்கழிப்பு, தாமதம் பிரச்னைகள் உள்ளன. முதியோர், கர்ப்பிணிகளுக்கு மருந்து, மாத்திரை வீடு தேடி வழங்கும் இத்திட்ட நோக்கம் பாதிக்கிறது. வீரக்கல், மல்லையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 3 பஸ்களில் மாறி சித்தையன் கோட்டை செல்ல வேண்டிய அவலம் உள்ளது. அவசிய தேவையை கருத்தில் கொண்டு மாற்று ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்க மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டியது அவசியம்.

தீர்வு

ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்று இடத்தில் ஏற்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், முதியோரின் அலைக்கழிப்பை கருத்தில் கொண்டு ஆத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போக்குவரத்து வசதி உள்ள மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். எஸ்.பாறைப்பட்டி போன்ற மையப் பகுதியில் அமைப்பதன் மூலம் மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, கெப்புசோலைப்பட்டி, வேலக்கவுண்டன்பட்டி, ஆர்.வி.எஸ்., நகர், ராமநாதபுரம், வண்ணம்பட்டி, வீரக்கல், கூத்தம்பட்டி உள்ளிட்ட பகுதி மக்களின் அலைக்கழிப்பு தவிர்க்கப்படும். மருத்துவ வசதி உள்ளிட்ட பிற சேவைகள் கிடைப்பதில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை