வசதிகள் செய்து கொடுங்க, ஆக்கிரமிப்பை அகற்றுங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
திண்டுக்கல்: அடிப்படை வசதிகள் செய்து கொடுங்க, நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 176 மனுக்கள் பெறப்பட்டன. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் செல்வன் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 38 பயனாளிகளுக்கு ரூ.6.57 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். வேடசந்துார் வள்ளிபட்டி ஏ.டி., காலனி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியிருக்கின்றனர். மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், கலையரங்கம் உட்பட எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர். திண்டுக்கல் அருகே ஸ்ரீராமபுரம், கோடல்வாவி கிராம மக்கள் அளித்த மனுவில், ''50க்கு மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் விவசாயம் செய்கிறோம். சோத்தாள நாயக்கன் கோம்பை அணைக்கட்டில் இருந்து வரும் நீர் மாங்கரை ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் சிலர் ஆக்கிரமித்து ரோடு அமைக்க முயற்சித்து வருகின்றனர். மழைக் காலங்களில், அணைக்கட்டில் இருந்து நீர் வராமல் நின்று விடுகிறது. விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பாதிக்கின்றனர். நீரோடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தடுப்பணை கட்டி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.