கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை அச்சத்தில் பொது மக்கள்
பாலசமுத்திரம் : திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பொருந்தல் கிராமப் பகுதியில் காட்டு யானை சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். பொருந்தல் பகுதி மலை அடிவாரத்தில் பாலாறு, பொருந்தலாறு அணை பகுதி அருகே கிராமங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு அணைப்பகுதியில் இருந்து பொருந்தல் பகுதிக்குள் காட்டு யானை புகுந்தது. வழக்கமாக இரவில் வரும் யானை விடிவதற்குள் காட்டுக்குள் சென்று விடும். ஆனால் ஒற்றையானை பகலில் பல மணி நேரம் அணைப் பகுதிக்கு அருகே உள்ள மீன்வளத்துறை கட்டட வளாகத்தில் நடமாடியது. இதை கண்டு கிராமமக்கள் அஞ்சுகின்றனர். வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், வாகனத்தில் ஒலி எழுப்பியும் காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் காட்டுக்குள் சொல்லாமல் பாலாறு பொருந்தலாற்றில் தஞ்சமடைந்தது. கிராமத்திற்குள் செல்லாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், 'யானையின் வழித்தடத்தில் சோலார்வேலிகள், கட்டடங்கள் அமைப்பதால் யானை திரும்பி செல்ல வழி தெரியாமல் இங்கேயே சுற்றி வருகிறது ' என்றனர்.