இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக உள்ள 7 தொகுதிகளில் 19,15,564 வாக்களர்கள் உள்ளனர்.மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் பூங்கொடி வெளியிட்டார். பழநி சப் - கலெக்டர் கிஷன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், திண்டுக்கல் ஆர்.டீ.ஓ., சக்திவேல், தேர்தல் தாசில்தார் முத்துராமன் பங்கேற்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தம் 2025க்காக கடந்தாண்டு அக்.29 முதல் நவ. 28 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் பெறப்பட்ட மனுக்கள் முடிவு செய்யப்பட்டு நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ.,, தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.